அடுத்த அதிரடி; அரசு ஒதுக்கிய பங்களாவில் இருந்து வெளியேற ராகுல் காந்திக்கு நோட்டீஸ்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அரசு ஒதுக்கிய பங்களாவில் இருந்து வெளியேறும்படி மக்களவை வீட்டு வசதி குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Update: 2023-03-27 13:26 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் அவருக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது.

2004-ம் ஆண்டு, மக்களவை எம்.பி.யாக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், டெல்லியில் உள்ள எண் 12, துக்ளக் தெரு பகுதியில் அமைந்த பங்களா அவருக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், எம்.பி. பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு உள்ளார். இந்த சூழலில், அரசு ஒதுக்கிய பங்களாவில் இருந்து வெளியேறும்படி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மக்களவை வீட்டு வசதி குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

விதிகளின்படி, தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒரு மாதத்தில் அவர் அரசு பங்களாவில் இருந்து வெளியேற வேண்டும். கடந்த மார்ச் 23-ந்தேதி மக்களவை செயலகம் அவரை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது. இதனால், வருகிற ஏப்ரல் 22-ந்தேதிக்குள் ராகுல் காந்தி பங்களாவை காலி செய்ய வேண்டும். சூரத் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்ததும் அவருக்கு உடனடியாக ஜாமீனும் வழங்கியது.

அவருக்கு மேல் நீதிமன்றம் ஒன்றில் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளித்தது. ஆனால், அந்த மேல் நீதிமன்றம் அவருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மற்றும் தண்டனைக்கு தடை விதிக்கவில்லை எனில், 8 ஆண்டுகளுக்கு ராகுல் காந்தியால் தேர்தலில் போட்டியிட முடியாது.

Tags:    

மேலும் செய்திகள்