பீகாரில் புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது - அதிர்ச்சி வீடியோ

ரூ.12 கோடி செலவில் மாநில அரசால் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது.

Update: 2024-06-18 21:49 GMT

பாட்னா,

பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள குர்சா காந்தா மற்றும் சிக்டி பகுதிகளை இணைக்கும் வகையில் பக்ரா ஆற்றின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. ரூ.12 கோடி செலவில் மாநில அரசால் இந்த பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்டுமான பணிகள் முடிந்துவிட்டபோதிலும் பாலத்தின் அணுகு சாலைகள் அமைக்கப்படாததால் பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் இருந்தது.

பணிகள் நிறைவடைந்து பாலம் விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த புதிய பாலம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. எனினும் இந்த விபத்தில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. சம்பவத்தின் போது கட்டுமான தொழிலாளர்கள் பணியில் இருந்தார்களா? என்கிற தகவலும் தெரியவில்லை.

இதனிடையே நொடிப்பொழுதில் பாலம் இடிந்து ஆற்றில் விழும் பதைபதைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக கடந்த மார்ச் மாதம், சுபால் மாவட்டத்தில் கோசி ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததும், இதில் ஒருவர் பலியானதுடன், 10 பேர் படுகாயமடைந்ததும் நினைவுகூரத்தக்கது. 

 

Tags:    

மேலும் செய்திகள்