வாஸ்கோடகாமா-யஷ்வந்தபுரம் இடையே புதிய ரெயில் இயக்கம்
வாஸ்கோடகாமா-யஷ்வந்தபுரம் இடையே புதிய ரெயில் இயக்கப்படும் என்று தென் மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.;
உப்பள்ளி:-
தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் உள்ள தென்மேற்கு ரெயில்வே அலுவலகத்தில் நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் ரெயில்வே துறையை சேர்ந்த பொது மேலாளர் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது புதிய ரெயில் ஒன்றை இயக்குவது தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அந்த ரெயில் கோவா வாஸ்கோடகாமாவில் இருந்து பெங்களூரு யஷ்வந்தபுரத்திற்கு இயக்கப்படுகிறது.
இது குறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவா வாஸ்கோடகாமா ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு யஷ்வந்தபுரத்துக்கு வருகிற ஜனவரி 2-ந் தேதி முதல் புதிய ரெயில் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வாஸ்கோடகாமாவில் இருந்து ஜனவரி 2-ந்தேதி புறப்பட்டு மறுநாள் (3-ந்தேதி) அதிகாலை 5.45 மணிக்கு யஷ்வந்தபுரத்திற்கு வந்தடைகிறது. உப்பள்ளி வழியாக இயக்கப்படும் இந்த ரெயில், வாஸ்கோடகாமாவில் இருந்து மடகாம், குலேம், கேசில் ராக், ஹோண்டா, தார்வார், எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி, ஹாவேரி, தாவணகெரே, அரிசிகெரே, துமகூரு வழியாக யஸ்வந்தபுரத்தை வந்தடைகிறது. இந்த ரெயில் மறுமார்க்கமாக இயக்கப்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.