காவிரி ஆற்றில் குதித்து புதுபெண் தற்கொலை; வாலிபருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

காதல் திருமணத்திற்கு பெற்றோர் வராததால் காவிரி ஆற்றில் குதித்து புதுபெண் தற்கொலை செய்து கொண்டார். மேலும் வாலிபருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-08-19 15:15 GMT

மைசூரு;


மைசூரு மாவட்டம் உன்சூர் பகுதியை சேர்ந்தவர் மரிசிக்கா. இவரது மகள் காவ்யா(வயது 23). இதேபோல் அதே பகுதியை சேர்ந்த நரசய்யா என்பவரின் மகன் முத்துகுமார்(27). இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

ஆனால் இவர்களின் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனாலும் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எச்.டி.கோட்டை பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் அவர்களின் திருமணத்திற்கு இருவரது பெற்றோரும் வராததால் இருவரும் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் கே.ஆர்.நகர் தாலுகா யடதொடரே கிராமத்தின் அருகில் ஓடும் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டி இருக்கும் பாலத்திற்கு சென்றனர்.

பின்னர் பாலத்தின் மேல் இருந்து காவிரி ஆற்றில் இருவரும் குதித்தனர். இதனை அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் விரைந்து சென்று இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் காவ்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாா். முத்துகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து எச்.டி.கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்