புதுப்பெண் அடித்து கொலை கணவர் உள்பட 2 பேர் கைது
திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவமொக்கா-
திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காதல் திருமணம்
சிவமொக்கா டவுன் சாரதா நகரை சேர்ந்தவர் நமீதா (வயது22). ஹரிகே பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (28). இவர்கள் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். பின்னர் அது காதலாக மாறியது. இந்தநிலையில் 2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி இருவீட்டார் சம்மதத்துடன் நமீதாவுக்கும், சதீசிற்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
2 பேரும் சில மாதங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாகவே சதீசிற்கும், நமீதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் சதீஷ் உனது பெற்றோரிடம் வரதட்சணை வாங்கிவிட்டு வா என நமீதாவிடம் கூறி வந்தார். சதீசின் தாயார் கிரிஜம்மாவும் நமீதாவிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்து வந்தார்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை
இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட கடந்த 18-ந் தேதி தனது பெற்றோர் வீட்டிற்கு நமீதா சென்றார். அங்கு குடும்பத்தினருடன் பண்டிகையை நமீதா கொண்டாடினார். அப்போது கணவர் மற்றும் அவரது தாயார் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக நமீதா பெற்றோரிடம் கூறினார். அவரை ெபற்றோர் சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து நமீதா அங்கிருந்து இரவு 11 மணிக்கு மேல் சதீஷ் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்தநிலையில், நமீதாவின் பெற்றோருக்கு சதீஷ் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அதில், உங்களது மகள் (நமீதா) வீட்டில் மயங்கி விழுந்து விட்டார்.
அதிர்ச்சி அடைந்தனர்
இதனால் அவரை சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்துள்ளேன் என கூறியுள்ளார். இதையடுத்து நமீதாவின் பெற்றோர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அப்போது நமீதா இறந்து விட்டதாக டாக்டர் கூறினார். இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக நமீதாவின் பெற்றோர் சிவமொக்கா புறநகர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சதீஷ் மனைவியை அடித்து கொன்றதும், அதற்கு உடந்தையாக கிரிஜம்மா இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சதீஷ், கிரிஜம்மா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.