கர்நாடகத்தில் புதிய கல்வி கொள்கை உருவாக்க நிபுணர் குழு

கா்நாடகத்தில் புதிய கல்வி கொள்கையை உருவாக்க நிபுணர் குழு அமைக்கப்படுவதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.

Update: 2023-08-21 18:45 GMT

பெங்களூரு :-

கட்டமைப்பு வசதிகள்

தேசிய கல்வி கொள்கை தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா, உயர்கல்வித்துறை மந்திரி எம்.சி.சுதாகர், மருத்துவ கல்வித்துறை மந்திரி சரணபிரகாஷ் பட்டீல் மற்றும் உயர் அதிகாரிகள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில்  ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு தேசிய கல்வி கொள்கையை கொண்டு வந்துள்ளது. இதை முதல் முறையாக கர்நாடகத்தில் முந்தைய பா.ஜனதா அரசு அவசரகதியில் அமல்படுத்தியது. எந்த ஒரு கல்வி கொள்கையாக இருந்தாலும், அதை தொடக்க கல்வியில் இருந்து செயல்படுத்த வேண்டும். மேலும் அவற்றுக்கு போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லை.

மாநில அரசுக்கு உட்பட்டது

முன்பு சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த தேசிய கல்வி கொள்கையில் பழங்கால முறையை அறிமுகம் செய்கிறார்கள். நமக்கு நவீன கொள்கை தேவைப்படுகிறது. தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது இல்லை என்று இந்த கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம்.

நாங்கள் தனியாக ஒரு நிபுணர் குழு அமைத்து புதிய கல்வி கொள்கையை உருவாக்குவோம். புதிய தலைமுறைக்கு ஏற்ற வகையில் கல்வி கொள்கை உருவாக்கப்படும். இந்த கல்வி கொள்கை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும்.

கல்வி மாநில அரசுக்கு உட்பட்டது. அதனால் தரமான கல்வியை குழந்தைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜனதாவின் நாக்பூர் கல்வி கொள்கை எங்களுக்கு தேவை இல்லை. இந்த கொள்கையை பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தவில்லை. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் அந்த தேசிய கல்வி கொள்கையை நிராகரித்துள்ளது.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்