தொலைதொடர்பு நெட்வொர்க்கை கையகப்படுத்தும் புதிய வரைவு சட்டம் மக்களவையில் அறிமுகம்

தொலைதொடர்பு நெட்வொர்க்கை சஸ்பெண்டு செய்யும் அதிகாரங்களையும் இந்த வரைவு சட்டம் வழங்குகிறது.;

Update: 2023-12-18 11:04 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் தொலைதொடர்பு மசோதா 2023 இன்று அறிமுகம் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நடந்த அத்துமீறல் பற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிக்கை அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. எனினும், மத்திய தொலைதொடர்பு மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் இதனை இன்று தாக்கல் செய்துள்ளார்.

இந்த வரைவு சட்டத்தின்படி, அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தொலைதொடர்பு சேவையை அல்லது தொலைதொடர்பு நெட்வொர்க்கை தற்காலிக அடிப்படையில் மத்திய அல்லது மாநில அரசு கையகப்படுத்தி கொள்ள முடியும்.

பேரிடர் மேலாண்மை உள்பட பொதுமக்களுக்கான அவசரநிலை சூழல்களில் அல்லது பொதுமக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, மத்திய அல்லது மாநில அரசு அல்லது மத்திய, மாநில அரசுகளால் சிறப்பான முறையில் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு அதிகாரியோ, தேவையேற்படும் பட்சத்தில், அறிவிப்பு ஒன்றின் வழியே எந்தவொரு தொலைதொடர்பு சேவையை அல்லது தொலைதொடர்பு நெட்வொர்க்கை தற்காலிக அடிப்படையில் கைவசப்படுத்தி கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொலைதொடர்பு நெட்வொர்க்கை சஸ்பெண்டு செய்யும் அதிகாரங்களையும் இந்த வரைவு சட்டம் வழங்குகிறது. இந்திய டெலிகிராப் சட்டம் 1885, இந்திய வயர்லெஸ் டெலிகிராபி சட்டம் 1933 மற்றும் டெலிகிராப் ஒயர்ஸ் (சட்டவிரோத உரிமை) சட்டம் 1950 ஆகியவற்றிற்கு மாற்றாக இந்த புதிய சட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த சட்டங்களில் சில 138 ஆண்டுகள் பழமையானவையாக உள்ளன. தொலைதொடர்பில் விரைவாக வளர்ச்சி கண்டு வரும் தொழில் நுட்பங்களை முன்னிட்டு புதிய சட்டம் ஒன்று தேவையாக உள்ளது என அரசு இதனை கவனத்தில் கொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்