பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் புதிய கிரிக்கெட் மைதானம் - ரூ.300 கோடி செலவில் அமைய உள்ளதாக தகவல்
வாரணாசியில் ரூ.300 கோடி செலவில் புதிதாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் புதிதாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மைதானம் ரூ.300 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு வாரணாசியில் உள்ள கன்ஜாரி என்ற பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா, துணை தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
உத்தர பிரதேசத்தில் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானம், லக்னோவில் உள்ள ஏகானா மைதானம் ஆகியவற்றைத் தொடர்ந்து 3-வதாக வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளது. இந்த மைதானம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.