தேர்தல் பத்திரங்கள் மூலம் நாங்கள் நிதியுதவி எதுவும் பெறவில்லை.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விளக்கம்
கொள்கை அடிப்படையில் தேர்தல் பத்திரங்களை ஏற்க மறுத்துவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திர திட்டம் சட்டவிரோதமானது என்றும், அந்த திட்டம் செல்லாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்வதை உடனே நிறுத்தும்படியும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி தொடர்பான தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் பத்திரங்கள் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்கொடை பெற்றுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கொள்கை அடிப்படையில் தேர்தல் பத்திரங்களை ஏற்க மறுத்துவிட்டது என்பதுதான் உண்மை. அதனால்தான், தேர்தல் பத்திரங்களை மாற்றுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி கணக்கைக் கூட திறக்கவில்லை. இந்த அடிப்படை எதிர்ப்பின் காரணமாக, தேர்தல் பத்திரத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.