நேபாளத்தில் புதிய அரசு அமைக்க நேபாள காங்கிரஸ் தீவிரம்
நேபாளத்தில் புதிய அரசு அமைக்க நேபாள காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.
காத்மாண்டு,
நேபாளத்தில் கடந்த 20-ந்தேதி நடந்த நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 28-ந்தேதி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அங்கு தேர்தல் நடந்த 165 இடங்களில் 162 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.
இதில் நேபாள காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 55 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. எதிர்க்கட்சியான சி.பி.என்-யு.எம்.எல். கட்சிக்கு 44 இடங்கள் கிடைத்து உள்ளன.
இதைத்தொடர்ந்து அங்கு புதிய அரசு அமைக்க நேபாள காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. சிறிய கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் துணை பிரதமருமான பிரகாஷ் மான்சிங் தெரிவித்தார்.
மொத்தமுள்ள 275 இடங்களில் 165 இடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடந்த நிலையில் மீதமுள்ள 110 இடங்களுக்கு விகிதாசார முறை மூலம் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எனவே அனைத்து இடங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியானதும் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என்றும் அவர் கூறினார்.