பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை

லஞ்ச வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு பிறப்பிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதன்மூலம் தகுதி நீக்கத்தில் இருந்து அவர் தப்பித்துள்ளார்.;

Update: 2023-04-05 20:51 GMT

பெங்களூரு:

லஞ்ச வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு பிறப்பிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதன்மூலம் தகுதி நீக்கத்தில் இருந்து அவர் தப்பித்துள்ளார்.

எம்.எல்.ஏ.வுக்கு 2 ஆண்டு சிறை

ஹாவேரி மாவட்டத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் நெகரு ஒலேகார். இவர், கடந்த 2009-10-ம் ஆண்டில் பா.ஜனதா ஆட்சியில் எம்.எல்.ஏ.வாக இருந்த போது அரசு பணிகள் நடைபெற்றதாக கூறி போலி ஆவணங்களை கொடுத்து, அரசிடம் இருந்து நிதி பெற்றிருந்தார். இந்த முறைகேடு தொடர்பாக நெகரு ஒலேகார், அவரது மகன் மீது லோக் அயுக்தா போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில், நெகரு ஒலேகார் எம்.எல்.ஏ. மீது லோக் அயுக்தா போலீசார் ஊழல் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

பின்னர் அவர் மீது பதிவான வழக்கு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டு, அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தி, முறைகேட்டில் ஈடுபட்டது ஆதாரத்துடன் நிரூபணமாகி இருந்ததால், கடந்த ஆண்டு (2022) பிப்ரவரி மாதம் நெகரு ஒலேகாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறி இருந்தது.

ஐகோர்ட்டு தடை

பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு லஞ்ச வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தாலும், அவரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யவில்லை. சமீபத்தில் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதால், நெகரு ஒலேகாரை எதற்காக தகுதி நீக்கம் செய்யவில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். அதே நேரத்தில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை விதிக்க கோரி கர்நாடக ஐகோாட்டில் நெகரு ஒலேகார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி நடராஜன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது லஞ்ச வழக்கில் நெகரு ஒலேகாருக்கு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டு பிறப்பித்திருந்த 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு கூறினார். இதன்மூலம் எம்.எல்.ஏ. தகுதி நீக்கத்தில் இருந்தும், 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதில் இருந்தும் நெகரு ஒலேகார் எம்.எல்.ஏ. தப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்