நீட் முறைகேடு விவகாரம்: பிரதமர் மோடி வழக்கம்போல் மவுனமாக இருக்கிறார் - ராகுல் காந்தி

நீட் முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மோடி வழக்கம்போல் மவுனமாக இருந்து வருகிறார் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Update: 2024-06-18 11:13 GMT

புதுடெல்லி,

2024-25ம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. தேர்வு எழுதியவர்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு 67 பேர் நீட் தேர்வில் 720 என்ற முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக ஒரே கல்வி மையத்தில் இருந்து அதிகம் பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

இந்நிலையில் நீட் முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மோடி வழக்கம்போல் மவுனமாக இருந்து வருகிறார் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"நீட் தேர்வால் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் சீர்குலைந்த விவகாரத்தில், நரேந்திர மோடி வழக்கம்போல் மவுனம் சாதித்து வருகிறார். இது தொடர்பாக பீகார், குஜராத், அரியானா ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகள், நீட் தேர்வில் திட்டமிட்ட முறையில் ஊழல் நடந்திருப்பதையும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் வினாத்தாள் கசிவின் மையமாக மாறியுள்ளதையும் தெளிவாக காட்டுகிறது.

வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றுவதன் மூலம் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்திருந்தது. எதிர்க்கட்சிகளின் பொறுப்பை நிறைவேற்றும் அதே வேளையில், இளைஞர்களின் குரலை வீதிகளில் இருந்து நாடாளுமன்றம் வரை வலுவாக எழுப்பி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் கடுமையான சட்டங்களை வகுக்க உறுதி பூண்டுள்ளோம்."

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்