தீர்த்தஹள்ளி அருகேதொடர் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை பிடிபட்டது

தீர்த்தஹள்ளி அருகே தொடர் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை பிடிபட்டது. வனத்துறையினருக்கு மந்திரி அரக ஞானேந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-02 06:45 GMT

சிவமொக்கா-

தீர்த்தஹள்ளி அருகே தொடர் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை பிடிபட்டது. வனத்துறையினருக்கு மந்திரி அரக ஞானேந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார்.

யானை அட்டகாசம்

சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா மாளூர் கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து கடந்த சில வாரங்களாக காட்டு யானை ஒன்று ெவளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது. அந்த யானை கிராம மக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வந்தது. மேலும் பயிர்களையும் நாசப்படுத்தி வந்தது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே பயத்தில் இருந்து வந்தனர்.

மேலும் அந்த யானையை பிடிக்க வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து வனத்துறையினர் அந்த யானையை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.

பிடிபட்டது

வனத்துறை அதிகாரி சிவசங்கர் தலைமையிலான வனத்துறையினர் கடந்த 7 நாட்களாக காட்டு யானையை பிடிக்க தீவிர நடவடிக்ைக எடுத்து வந்தனர். இந்த நிலையில் 8-வது நாளாக நேற்று முன்தினமும் வனத்துறையினர், மைசூரு மற்றும் உன்சூரை சேர்ந்த மருத்துவ குழுவினர் உதவியுடன் காட்டு யானையை தேடினர். இந்த நிலையில் மாளூர் அருகே தேவாங்கி வனப்பகுதியில் காட்டு யானை சுற்றித்திரிந்தது தெரியவந்தது.

இதையடுத்து வனத்துறையினர், மருத்துவ குழுவினருடன் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் மருத்துவ குழுவினர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை யானை மீது செலுத்தினர். மயக்க ஊசி பட்டதும் சிறிது தூரம் ஓடிய காட்டு யானை மயங்கி விழுந்தது. பின்னர் வனத்துறையினர் கயிறு மற்றும் சங்கிலியால் கட்டி யானையை சிறைபிடித்தனர். இதையடுத்து அந்த யானையை லாரியில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர்.

மந்திரி பாராட்டு

இதுகுறித்து வனத்துறை அதிகாரி சிவசங்கர் கூறுகையில், பிடிபட்டது 10 வயது ஆண் யானை ஆகும். அந்த யானை நாகரஒலே வனப்பகுதியில் விடப்படும் என்றார். மாளூர் பகுதியில் தொடர் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை பிடிபட்டதால் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

காட்டு யானை பிடிக்கப்பட்டது பற்றி அறிந்ததும் சிவமொக்கா தொகுதி எம்.எல்.ஏ.வும், போலீஸ் மந்திரியுமான அரக ஞானேந்திரா சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் யானையை பிடித்த வனத்துறையினருக்கு பாராட்டு தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்