சுள்ளியா அருகே நாட்டு துப்பாக்கியால் சுட்டு தொழிலாளி தற்கொலை
சுள்ளியா அருகே மாடு மேய்க்க சென்ற இடத்தில் நாட்டு துப்பாக்கியால் சுட்டு தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.;
மங்களூரு-
சுள்ளியா அருகே மாடு மேய்க்க சென்ற இடத்தில் நாட்டு துப்பாக்கியால் சுட்டு தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
கூலி தொழிலாளி
தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா உபரடுக்கா கிராமத்தை அடுத்த பெல்ராம்பாடியை சேர்ந்தவர் ரவி. திருமணமாகாதவர் என்று கூறப்படுகிறது. பெல்ராம்பாடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கூலி வேலை பார்த்து வந்தார். அந்த வீட்டில் உள்ள மாடுகளை தினமும் அருகே உள்ள வனப்பகுதியில் மேய்த்துவிட்டு வருவது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் காலை மாடுகளை மேய்த்து சென்ற ரவி, வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உரிமையாளர், சக தொழிலாளிகளுடன் சேர்ந்து ரவியை தேடி சென்றனர். அப்போது அங்கு ரவி இறந்து கிடந்தார். இதை பார்த்த அவர்கள் உடனே சுள்ளியா போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சுள்ளியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ரவியின் உடல் அருகே நாட்டு துப்பாக்கி கிடந்தது. மேலும் ரவியின் தலையில் துப்பாக்கி குண்டு துளைத்த காயங்கள் இருந்தது.
இதையடுத்து ரவி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சுள்ளியா போலீசார் ரவி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.