சிருங்கேரி அருகே துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை

சிருங்கேரி அருகே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-17 18:45 GMT

சிக்கமகளூரு-

சிருங்கேரி அருகே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடல் நலக்குறைவு

சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தாலுகா குன்சேபைலு கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 52). விவசாயம் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகேஷிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக நாகேஷ் பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் உடல் நிலை சரியாகவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் குடும்பத்தினர் அனைவரும் உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தனர்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த நாகேஷ் நாட்டு துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு கொண்டார். இதில் நாகேஷின் தலைப்பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

இந்த நிலையில் தோட்டத்திற்கு சென்றிருந்த மனைவி திரும்பி வந்து பார்த்தபோது, நாகேஷ் இறந்து கிடந்தார். நாகேஷின் உடலை பார்த்த மனைவி கதறி அழுதார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் நாகேஷின் உடலை பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நாகேஷின் உடலை கைப்பற்றி சிருங்கேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் நாகேஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த சிருங்கேரி போலீசார் இந்த தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்