மங்களூரு அருகே போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை விற்று ரூ.21 லட்சம் மோசடி

மங்களூரு அருகே போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை விற்று ரூ.21 லட்சத்தை மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Update: 2022-11-04 19:00 GMT

மங்களூரு;

வில்லங்க சான்றிதழ்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே சோமேஷ்வரில் கடந்த 2014-ம் ஆண்டு நடேஷ்குமார் என்பவர் ரூ.21 லட்சத்திற்கு 6 சென்ட் நிலம் வாங்கினார். அந்த நிலத்தை அவரிடம் ராகவேந்திரா, சாந்தா ஆகியோர் சேர்ந்து விற்றிருந்தனர். அவர்கள் நிலத்தை விற்கும்போது நிலம் மீது எந்தவிதமான வில்லங்கமும் இல்லை என்றும் கூறியிருந்தனர். அதற்கான ஆவணங்களையும் கொடுத்தனர். அதை நடேஷ்குமாரும் நம்பினார்.

தற்போது அந்த நிலத்தை நடேஷ்குமார் விற்க முயன்றார். அப்போது அந்த நிலத்தை வாங்க திட்டமிட்டு இருந்தவர்கள் வில்லங்க சான்றிதழை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து பெற்றனர்.

பவர் பத்திரம்

அதில் அந்த நிலத்தை ராகவேந்திராவும், சாந்தாவும் சேர்ந்து ரவீந்திரன் என்பவருக்கு பவர் பத்திரம் எழுதி கொடுத்து நில அடமான கடன் பெற்று இருந்ததும், அதன்பின்னர் அவர்கள் போலி பத்திரங்கள் தயாரித்து அதை நடேஷ்குமாரிடம் விற்று இருந்ததும் தெரியவந்தது. இதுபற்றி அவர்கள் நடேஷ்குமாரிடம் கூறினர்.

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நடேஷ்குமார், உடனடியாக இதுபற்றி மங்களூரு தெற்கு போலீசில் புகார் செய்தார். அதில் தன்னை ராகவேந்திராவும், சாந்தாவும் ஏமாற்றி போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை விற்று ரூ.21 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாக கூறியிருந்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்