பாகல்கோட்டை அருகேஅரசு கல்லூரியில் தூக்குப்போட்டு முதல்வர் தற்கொலை

பாகல்கோட்டை அருகே அரசு கல்லூரியில் முதல்வர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-08-22 18:45 GMT

பாகல்கோட்டை :-

கல்லூரியில் முதல்வர் தற்கொலை

பாகல்கோட்டை மாவட்டம் குனகுந்த் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரசு கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் முதல்வராக நாகராஜ் முதகல்லா(வயது 55) என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று கல்லூரியில் கலை நிகழ்ச்சி உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இதற்கான பொறுப்புகளை முதல்வர் நாகராஜ் ஏற்றுக் கொண்டு, அனைத்து பணிகளையும் அவரே முன் நின்று செய்து வந்தார். இதனால் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு செல்லாமல் அவர் கல்லூரியிலேயே தங்கி இருந்தார்.

இந்த நிலையில், நேற்று காலையில் கல்லூரியில் உள்ள கேண்டீன் பகுதியில் கல்லூரி முதல்வரான நாகராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் குனகுந்த் போலீசார் விரைந்து வந்து நாகராஜின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

பணியிடமாற்றம்

அப்போது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. நாகராஜ் கடந்த 14 ஆண்டுகளாக இலகல் டவுனில் உள்ள அரசு கல்லூரியில் தான் பணியாற்றி வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக தான் அவர் குனகுந்த் அரசு கல்லூரிக்கு மாற்றப்பட்டு இருந்தார்.

இதனால் பணியிட மாற்றம் காரணமாக நாகராஜ் தற்கொலை செய்தாரா? அல்லது குடும்ப பிரச்சினையா?, வேறு ஏதேனும் காரணமா? என்பது சரியாக தெரியவில்லை.

அவருக்கு மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரித்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர். இதுகுறித்து குனகுந்த் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்