நாகாலாந்தில் சட்டசபை இடைத்தேர்தல்: பா.ஜனதா கூட்டணி கட்சி வெற்றி
சுமார் 96 சதவீத வாக்குகள் பதிவானது. 15,256 வாக்காளர்களில் 96.25 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
கோகிமா,
நாகாலாந்தில், தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு மோன் மாவட்டம், தபி சட்டசபை தொகுதியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த நோக் வங்நவ் மரணம் அடைந்ததால், கடந்த மாதம் 7-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது.
சுமார் 96 சதவீத வாக்குகள் பதிவானது. 15,256 வாக்காளர்களில் 96.25 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதில் 7,788 ஆண்களும் 7,468 பெண்களும் அடங்குவர்.
அதில் போட்டியிட்ட ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி வேட்பாளர் வங்பங் கொன்யாக், 5 ஆயிரத்து 333 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வங்லம் கொன்யாக்கை தோற்கடித்தார். அவருக்கு முதல்-மந்திரி நெய்பியு ரியோ வாழ்த்து தெரிவித்துள்ளார். 60 பேர் கொண்ட நாகாலாந்து சட்டசபையில், அனைவருமே அரசை ஆதரிப்பது குறிப்பிடத்தக்கது.