பேனர்களில் கடவுள் உருவத்தை விட பிரதமா் மோடியை பெரிதாக காட்டிய பாஜக - கண்டனம் தெரிவித்த என்சிபி பிரமுகருக்கு போலீசார் நோட்டீஸ்
பேனர்களில் கடவுள் உருவத்தை விட, பிரதமா் மோடியின் படத்தை பெரிதாக காட்டியுள்ளனர் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் ரவிகாந்த் வார்பே குற்றம் சாட்டினார்.
புனே,
பிரதமா் மோடி இன்று புனேவின் டெஹுவில் உள்ள ஜகத்குரு ஸ்ரீசாந்த் துக்காராம் மகாராஜா ஆலயத்தை திறந்து வைக்கிறார். மராட்டிய மாநிலத்துக்கு பிரதமரின் வருகை தருவதையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமரை வரவேற்று பாஜக சார்பில் பேனர்கள் மற்றும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த பேனர்களில் துறவி துக்காராம் உருவத்தை விட, பிரதமா் மோடியின் படத்தை பெரிதாக காட்டியுள்ளனர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும் இளைஞரணி தலைவருமான ரவிகாந்த் வார்பே குற்றம் சாட்டினார்.
இதற்காக பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.பிரதமர் வருகையையொட்டி ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக மராட்டிய போலீஸ் ரவிகாந்த் வார்பேக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனை டுவிட்டரில் பகிர்ந்துள்ள ரவிகாந்த் வார்பே கூறியிருப்பதாவது, "விட்டல் பிரபுவை விட மோடி பெரியவர் என்று முன்னிறுத்தி, பாஜகவின் நிர்வாகிகள் அனைத்து பக்தர்களையும் அவமதித்துள்ளனர்.
ஆனால், நான் என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். பிரதமர் மோடியை விட நம்ம விட்டல் எப்போதும் பெரியவர். பிம்ப்ரி சின்ச்வாட் போலீசார் சட்டப்பிரிவு 149 இன் கீழ் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது சட்டப்பூர்வ நடைமுறைகளில் ஒன்றாகும்" என்று தெரிவித்துள்ளார்.