சத்தீஷ்கார் என்கவுண்ட்டர்: நக்சலைட்டு சுட்டுக்கொலை

சத்தீஷ்காரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் நக்சலைட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.

Update: 2024-04-29 05:49 GMT

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டம் கிஷ்டராம் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாநில போலீசாருடன் இணைந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கிஷ்டராம் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வனப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

இதனால், உடனடியாக சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப்படையினரின் பதிலடி தாக்குதலில் ஒரு நக்சலைட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். எஞ்சிய நக்சலைட்டுகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். என்கவுண்ட்டரின்போது துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தப்பியோடிய நக்சலைட்டுகளை பாதுகாப்புப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

முன்னதாக, கடந்த 16ம் தேதி சத்தீஷ்காரின் கன்கீர் மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 29 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்