ஒடிசா ரெயில் விபத்து; ரெயில் சேவை சீராகும் வரை கட்டணமில்லா பேருந்துகள் - நவீன் பட்நாயக் அறிவிப்பு

ஒடிசாவில் பூரி, புவனேஸ்வர், கட்டாக் ஆகிய இடங்களிலிருந்து கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படும் என முதல்- மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

Update: 2023-06-04 07:16 GMT

Photo Credit: PTI

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 3 ரெயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 294 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. ரெயில் விபத்து நடந்து 40 மணிநேரம் ஆனநிலையில் விபத்து நடந்த இடத்தில் உள்ள ரெயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. தண்டவாளத்தில் கிடந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள், சரக்கு ரெயில் பெட்டிகள் என அனைத்து ரெயில் பெட்டிகளும் அகற்றப்பட்டது. தொடர்ந்து நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளால் ஏராளமான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒடிசாவில் பூரி, புவனேஸ்வர், கட்டாக் ஆகிய இடங்களிலிருந்து கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படும் என முதல்- மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். பாலசோர் வழித்தடத்தில் ரெயில் சேவை சீராகும் வரை கொல்கத்தாவுக்கு கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படும். பூரி, புவனேஸ்வர், கட்டாக்கிலிருந்து கொல்கத்தாவுக்கு தினந்தோறும் 50 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இதனிடையே ரெயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் குறித்து ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்-கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். முன்னதாக, ரெயில் விபத்தில் உயிரிழந்த ஒடிசாவைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்