வக்கீல் கிடைக்காததால் 63 லட்சம் வழக்குகள் தாமதம் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

வக்கீல் கிடைக்காததால் 63 லட்சம் வழக்குகள் தாமதம் ஆவதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆந்திரபிரதேச நீதித்துறை அகாடமி தொடக்க விழாவில் பேசினார்.

Update: 2022-12-30 17:31 GMT

 ஆந்திர மாநிலம் அமராவதியில் ஆந்திரபிரதேச நீதித்துறை அகாடமி தொடக்க விழா நடந்தது. அதில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

மாவட்ட கோர்ட்டுகளை கீழ்கோர்ட்டுகள் போல் கருதும் காலனி மனப்பான்மை நிலவுகிறது. அதில் இருந்து மக்கள் வெளியே வர வேண்டும். மாவட்ட கோர்ட்டுகள், நீதித்துறையின் முதுகெலும்பு மட்டுமின்றி, நீதித்துறையுடன் முதலில் உரையாடும் இடம் ஆகும்.

சிறையில் போடாமல் ஜாமீனில் விட வேண்டும் என்பதுதான் குற்றவியல் நீதிமுறையின் அடிப்படை விதிமுறை. ஆனால் ஏராளமான விசாரணை கைதிகள் சிறையில் துன்புறுகிறார்கள். தேசிய நீதித்துறை தகவல் தொகுப்பின்படி, வக்கீல் கிடைக்காமல் 63 லட்சத்துக்கு மேற்பட்ட வழக்குகள் தாமதம் அடைந்துள்ளன. சில ஆவணங்கள் கிடைக்காததால், 14 லட்சத்துக்கு மேற்பட்ட வழக்குகள் தாமதம் அடைந்துள்ளன. இன்னும் கோர்ட்டுகளில் இருந்து புள்ளிவிவரங்கள் வர வேண்டி இருப்பதால், இது கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம். மாவட்ட கோர்ட்டு அளவிலேயே மக்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும். ஜாமீன் கொடுத்ததற்காக சில விசாரணை கோர்ட்டு நீதிபதிகளை ஐகோர்ட்டுகள் கண்டிப்பதை பார்த்து இருக்கிறோம்.

நீதிபதிகளின் செயல்பாடு, குற்ற நிரூபண விகிதம் அடிப்படையில் ஆய்வு செய்யப்படுகிறது. அந்த பழக்கத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்