'தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நீண்ட காலம் நீடிக்காது' - பூபேஷ் பாகல்

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நீண்ட காலம் நீடிக்காது என்றும் சத்தீஷ்கார் முன்னாள் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-08 06:58 GMT

ராய்ப்பூர்,

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே பல்வேறு கொள்கை வேறுபாடுகள் இருப்பதாகவும், இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நீண்ட காலம் நீடிக்காது என்றும் சத்தீஷ்கார் முன்னாள் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;-

"ஆந்திர மாநிலமும், பீகார் மாநிலமும் தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று கேட்கின்றனர். இதன் காரணமாகவே முன்பு சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினார். இதனிடையே ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.தியாகி, அக்னிவீர் திட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்கிறார். இவை அனைத்துமே மோடி அரசுக்கு எதிராக உள்ளன.

பா.ஜ.க.வினர் பொது சிவில் சட்டம் குறித்து பேசினால் நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அவர்கள் இருவருமே சிறப்பாக பேச்சுவார்த்தை நடத்தக் கூடியவர்கள். மேலும் அவர்கள் இருவரும் தங்களுக்கு பல்வேறு முக்கிய துறைகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அங்கே இருப்பவர் வாஜ்பாய் அல்ல, மோடி. அவர் யார் பேச்சையும் கவனிக்க மாட்டார். இந்த கூட்டணி அரசு நீண்ட காலம் நீடிக்காது."

இவ்வாறு பூபேஷ் பாகல் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்