மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் 'நமோ பாரத்' ரெயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

டெல்லி, காசியாபாத் மற்றும் மீரட் இடையே இயக்கப்படும் அதிவேக மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Update: 2023-10-20 07:37 GMT

Image Credits : PTI

புதுடெல்லி,

உத்தரப்பிரதேசத்தின் சாஹிபாபாத் ரேபிட் எக்ஸ் ரெயில் நிலையத்தில், டெல்லி, காசியாபாத் மற்றும் மீரட் நகரங்களை இணைக்கும் பிராந்திய விரைவு போக்குவரத்து (RRTS - Regional Rapid Transit System) சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்து அதில் பயணம் மேற்கொண்டார்.

மணிக்கு 180 கி.மீ வேகத்தில் இயங்கும் இந்த ரெயில் சேவைக்கு 'நமோ பாரத்' என பெயரிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பயண நேரம் பாதியாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'நமோ பாரத்' ரெயில்:

நாட்டின் ரெயில் போக்குவரத்து சேவையை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக நாட்டின் பல்வேறு பகுதிகளை விரைவாக இணைக்கும் வகையில் 'வந்தே பாரத்' ரெயில் இயக்கப்படுகிறது. இது 130 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்த கட்டமாக மணிக்கு 180 கி.மீ வேகத்தில் இயங்கக்கூடிய அதிவேக மெட்ரோ ரெயில் சேவையான 'நமோ பாரத்' இயக்கப்படுகிறது.

முதற்கட்டமாக டெல்லி, காசியாபாத் மற்றும் மீரட் நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. டெல்லி முதல் மீரட் இடையே ரூ.30,274 கோடி செலவில் இந்த ரெயில் சேவையை தொடங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 82 கி.மீ தூர வழித்தடத்தில் 25 ரெயில் நிலையங்கள் 2 பணிமனைகள் அமைந்துள்ளன. இதில் 68.03 கி.மீ நீளத்திற்கு உயர்மட்ட பாதையாகவும், 14.12 கி.மீ நீளத்திற்கு சுரங்கப்பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த வழித்தடத்தில் முதற்கட்டமாக துஹாய் முதல் சாஹியாபாத் இடையேயான 17 கி.மீ தூர ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து அதில் பயணம் மேற்கொண்டார்.

அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கும் வகையில் இந்த ரெயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போதைய வழித்தடத்தில் 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதால் இந்த ரெயில் குறைவான வேகத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெயிலின் சிறப்புகள்:

இந்த அதிவேக மெட்ரோ ரெயிலில் மொத்தம் 6 குளிர்சாதன வசதிகொண்ட நவீன பெட்டிகள் உள்ளன. அதில் ஒரு சொகுசு வசதி கொண்ட முதல் வகுப்பு பெட்டியும், ஒரு பெண்கள் பெட்டியும் , 4 சாதாரண பெட்டிகளும் இருக்கும். இருபுறமும் தலா 2 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ள இந்த ரெயிலின் ஒரு பெட்டியில் 72 பயணிகள் வரை அமர்ந்து பயணிக்க முடியும் .

ஒவ்வொரு இருக்கையிலும் மொபைல் சார்ஜிங் வசதி, புத்தகங்கள் வைக்கும் வசதி இருக்கும். மேலும் நின்றுகொண்டு பயணிப்பவருக்கு கைப்பிடி வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர சிசிடிவி கேமரா, இலவச வைபை வசதி, உணவு பொருட்கள் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்