இஸ்ரேலில் சிக்கியவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை நளின்குமார் கட்டீல் எம்.பி. தகவல்

இஸ்ரேலில் சிக்கி தவிப்பவர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நளின்குமார் கட்டீல் எம்.பி. கூறினார்.

Update: 2023-10-10 18:45 GMT

மங்களூரு-

இஸ்ரேலில் சிக்கி தவிப்பவர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நளின்குமார் கட்டீல் எம்.பி. கூறினார்.

இஸ்ரேல்

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென ராக்கெட் தாக்குதல் நடத்தினர். சுமார் 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகள் மழையாக பொழியப்பட்டன. அந்த அதிர்ச்சியில் இருந்து இஸ்ரேல் மீள்வதற்குள் கடல் வழியாகவும், தரை மற்றும் வான் வழியாகவும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் சுமார் 1,200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசும், வெளியுறவு துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் இதுபற்றி தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

5 ஆயிரம் பேர்

இஸ்ரேலில் போர் நிலை கடலோர காவல் படையினருக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக கடலோர மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் இஸ்ரேலில் சிக்கித்தவிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அவர்களை பத்திரமாக மீட்க கோரி ஏற்கனவே மத்திய வெளியுறவு துறை மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளேன்.

அவர்களை பத்திரமாக மீட்கும் பணியை மத்திய அரசு செய்து வருகிறது. இஸ்ரேலில் சிக்கித்தவிப்பவர்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் கேட்டிருக்கிறேன். இஸ்ரேலில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருந்தாலும், அவர்கள் ஒவ்வொரு நிமிடமும் அச்சத்துடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

பயப்பட தேவையில்லை

ரஷ்யா-உக்ரைன் போர் ஏற்பட்டபோது இதே நிலை தான் இருந்தது. அந்த சமயத்தில் பிரதமர் மோடி துரிதமாக செயல்பட்டு உக்ரைனில் சிக்கித்தவித்த இந்தியர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை மேற்கொண்டார். இஸ்ரேல் தூதரகத்துடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது. அதனால் அங்குள்ள யாரும் பயப்பட தேவையில்லை. இதுதொடர்பாக வேறு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் என்னை(நளின்குமார்கட்டீல்) நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்