தற்காலிக பஸ் நிறுத்த இரும்பு கம்பிகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள்

பெங்களூரு எச்.ஆர்.பி.ஆர். லே-அவுட் பகுதியில் தற்காலிக பஸ் நிறுத்த இரும்பு கம்பிகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள் போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-06-20 18:45 GMT

பெங்களூரு:-

பெங்களூருவில் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமான பி.எம்.டி.சி. பஸ்கள் இயக்கப்படுகின்றன. நகரின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த பஸ்கள் இயக்கப்படுவதால், அவற்றில் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. பள்ளி மாணவர்கள், முதியவர்கள் என பலருக்கும் வசதியாக பெங்களூருவின் பல்வேறு இடங்களில் பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெங்களூருவில் பஸ் நிறுத்தங்கள் திருடுபோகும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அதாவது பெங்களூரு எச்.ஆர்.பி.ஆர். லே-அவுட் பகுதியில் இரும்பு கம்பிகளால் தற்காலிக பஸ் நிறுத்தம் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்த இரும்பு கம்பிகளை கடந்த மார்ச் மாதம் மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இதையடுத்து அந்த இடத்தில் இருந்து சிறிது தொலைவில் புதிதாக மாநகராட்சி சார்பில் இரும்பு கம்பிகளால் புதிய தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் மீண்டும் பஸ் நிறுத்த இரும்பு கம்பிகளை திருடி சென்றனர். மறுநாள் காலையில் அங்கு வந்தவர்கள், பஸ் நிறுத்தம் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் பஸ் நிறுத்தத்தை காணவில்லை என புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் பஸ் நிறுத்த இரும்பு கம்பிகளை திருடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்