கல்லூரி, வீடுகள், தெருக்களில் 'சாரி' என எழுதிய மர்மநபர்கள்;போலீசார் தீவிர விசாரணை

கல்லூரி, வீடுகள், தெருக்களில் 'சாரி' என எழுதிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-05-24 17:38 GMT

பெங்களூரு:

கல்லூரி, வீடுகள், தெருக்களில் 'சாரி' என எழுதிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சுங்கதகட்டேயில் ஒரு தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த கல்லூரிக்கு வந்த மர்மநபர்கள் கல்லூரியின் சுவர், கல்லூரி அமைந்து இருக்கும் சாலை, கல்லூரியை சுற்றி இருக்கும் வீடுகளில் 'சாரி' என்று பெயிண்டால் எழுதிவிட்டு மர்மநபர்கள் தப்பி சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை குடியிருப்புவாசிகள் எழுந்து இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதில் கல்லூரியின் சுவரில் 'சாரி' மா, 'சாரி' பா என்றும் எழுதப்பட்டு இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் காமாட்சிபாளையா போலீசார் சுங்கதகட்டேவுக்கு சென்று விசாரித்தனர். அப்போது 150 'சாரி' என்று எழுதப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் கல்லூரியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது நேற்று முன்தினம் இரவு கல்லூரியின் அருகே ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வரும் காட்சிகளும், அதில் ஒரு வாலிபர் கையில் ஒரு பெட்டியும் இருக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் 2 வாலிபர்களை பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கல்லூரியில் படித்து வரும் மாணவிக்கும், மாணவருக்கும் காதல் இருந்து இருக்கலாம் என்றும், மாணவியுடன் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு அவரை சமாதானப்படுத்தும் வகையில் மாணவர், சுவர்களில் 'சாரி' என்று எழுதி இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். இதற்கு வேறு காரணம் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்