முன்னாள் முதல்-மந்திரி இல்லத்திற்கு பூஜை செய்ய வந்த புரோகிதர்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல்
திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி பிப்லப் குமார் தேப் இல்லத்திற்கு இரவில் பூஜை செய்ய வந்த புரோகிதர்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.;
கோமதி,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவின் முன்னாள் முதல்-மந்திரியாக இருந்தவர் பிப்லப் குமார் தேப். பா.ஜ.க.வை சேர்ந்த, நாடாளுமன்ற மேலவை எம்.பி.யான இவரது பூர்வீக இல்லம் கோமதி மாவட்டத்தில் உதய்பூர் நகரில் ஜம்ஜூரி பகுதியில் ராஜ்தாநகர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
இந்த இல்லத்தில் இன்று காலை புரோகிதர்களை கொண்டு யாகம் நடத்தி, பூஜை செய்ய தேப் முடிவு செய்துள்ளார். இதற்காக நேற்றிரவு புரோகிதர்கள் சிலர் இவரது இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் மீதும், அவர்கள் வந்திருந்த வாகனங்களின் மீதும் மர்ம கும்பல் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை பார்த்த பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக உதவிக்கு ஓடி வந்துள்ளனர். அவர்களை கண்டதும் அந்த கும்பல் தப்பி விட்டது.
இதுபற்றி ஜிதேந்திரா கவுசிக் என்பவர் கூறும்போது, திரிபுராவில் சி.பி.ஐ.(எம்) இருக்க வேண்டும். இல்லையென்றால் யாரும் இருக்க கூடாது என அவர்கள் சத்தம் போட்டனர். என்னையும், என் வாகனம் மீதும் தாக்குதல் நடத்தினர் என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் எதிரொலியாக அந்த பகுதியில் போராட்டம் நடத்தப்பட்டு உள்ளது. இதில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர், தாக்குதல் நடத்தியவர்களின் கடைகள் என நம்பப்படுகிற சில கடைகளை அடித்து நொறுக்கினர். தொடர்ந்து, பதற்ற நிலையை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.