மைசூருவில் மோட்டார் சைக்கிள் விபத்து: 2 பேர் பலி

மைசூருவில் வெவ்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலியாகினர்.

Update: 2023-09-07 04:42 GMT

மைசூரு (மாவட்டம்) டவுன் குவெம்பு நகரை சேர்ந்தவர் குருபிரசாத் (வயது25). இவரது நண்பர் பார்கவா(22). இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் குருபிரசாத், பார்கவா ஆகிய 2 பேர் வழக்கம்போல் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

பின்னர் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் 2 பேரும் வந்து கொண்டிருந்தனர். குவெம்பு நகர் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் சாலையின் வேகத்தடையில் ஏறி இறங்கியது. இதில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் விழுந்தது.

சாவு

இதில் படுகாயம் அடைந்த பார்கவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். குருபிரசாத் படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மைசூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குருபிரசாத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த குவெம்பு நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பார்கவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

லாரி மோதல்

இதேப்போல் மைசூரு தட்டஹள்ளி பகுதியை சேர்ந்தவர் புனித் (வயது35). இவர் தனது நண்பர் நாகராஜுடன் இளவாலா பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் மைசூருவுக்கு சென்று கொண்டிருந்தார்.

ஆர்.டி.நகர் அருகே இவர்கள் சென்றபோது பி்ன்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட புனித், நாகராஜ் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே நாகராஜ் உயிரிழந்தார். புனித் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த 2 விபத்துகள் குறித்து குவெம்பு நகர் மற்றும் கே.ஆர். நகர் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்