மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்

தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார்.

Update: 2023-12-06 08:37 GMT

புதுடெல்லி,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் புயல் காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் நேற்று மாலை தெற்கு ஆந்திராவில் கரையை கடந்தது. இந்த புயல் ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, மிக்ஜம் புயலால் தமிழ்நாட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரியில் மிக்ஜம் புயலால் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன். புயலால் காயமடைந்தவர்களுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள், மீட்புக்குழுவினர் அயராது உழைத்து வருகின்றனர். இயல்புநிலை திரும்பும்வரை அதிகாரிகள் தொடர்ந்து பணியில் ஈடுபடுவார்கள்' என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்