முஸ்லிம்கள் நாகேனஹள்ளி தர்காவில் வழிபாடு நடத்த வேண்டும்
தத்தா பீடத்தில் இந்துக்கள் வழிபாடு நடைபெறுவதால், நாகேனஹள்ளி தர்காவில் முஸ்லிம்கள் வழிபாடு நடத்த வேண்டும் என்று ஸ்ரீராமசேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்துள்ளார்.;
சிக்கமகளூரு:-
தத்தா பீடம்
சிக்கமகளூரு சந்திர திரிகோண மலையில் உள்ள பாபாபுடன்கிரி கோவில் உள்ள தத்தா பீடத்தில் இந்துக்கள் தொடர்ந்து வழிபாடு ெசய்து வருகின்றனர். அதே இடத்தில் முஸ்லிம்களும் வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில் இதற்கு இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அந்த கோவில் இந்துக்களுக்கு உரியது என்று உரிமை கொண்டாடி வருகின்றனர்.
இதுதொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மாநில அரசு சிறப்பு நிர்வாக குழுவினரை நியமித்துள்ளது. மேலும் 2 அர்ச்சகர்களை வைத்து பூஜைகள் நடத்தி வருகிறது. இந்நிலையில் வழக்கம்போல இந்த தத்தா பீடத்திற்கு வரும் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த ஸ்ரீராமசேனை தேசிய தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறியதாவது:-
30 ஆண்டு கால போராட்டத்திற்கு பின்னர் தத்தா பீடத்தில் இந்து அர்ச்சகர்கள் மூலம் பூஜைகள் நடக்கிறது. இந்த தத்தா பீடத்தில் பூஜை நடப்பதற்கு காரணமாக இருந்த மாநில அரசுக்கும், தொகுதி எம்.எல்.ஏ. சி.டி.ரவிக்கும் எனது பாராட்டுகள் தெரிவித்து கொள்கிறேன்.
நாகனேஹள்ளி தர்கா
தத்தா பீடத்தில் இந்து முறைப்படி பூஜை நடப்பதால் அது முஸ்லிம்களுக்கு உகந்ததாக இருக்காது. எனவே முஸ்லிம்கள் நாகேனஹள்ளியில் உள்ள தர்காவிற்கு சென்று வழிபாடு செய்து கொள்ளலாம். அங்கு மாநில அரசு சார்பில் தேவையான ஏற்பாடுகள் செய்து கொடுக்க வழிவகை செய்யப்படும். வளர்ச்சி திட்டப்பணிகள் எதுவும் செய்யவேண்டும் என்றால், அரசு செய்து கொடுக்கும். தத்தா பீடம் போன்று நாகேனஹள்ளியும் சுற்றுலா தலமாக மாற்றப்படும். இதனால் மக்கள் வருகையும் அதிகரித்து காணப்படும். எனவே முஸ்லிம்கள் அந்த தர்காவை பராமரித்து அங்கே தொழுகை நடத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.