கோவிலில் வாழைப்பழங்கள் விற்க முஸ்லிம் வியாபாரிக்கு தடை; இந்து அமைப்பினர் கோரிக்கை
மங்களூரு அருகே கோவிலில் வாழைப்பழங்கள் விற்க முஸ்லிம் வியாபாரிக்கு தடைவிக்ககோரி இந்து அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
மங்களூரு;
கர்நாடகத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஹிஜாப், ஹலால் போன்ற முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் நடந்து வருகிறது. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்து கோவில்கள் முன்பு முஸ்லிம் வியாபாரிகள் கடை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. இந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே குடுபு கிராமத்தில் உள்ளது அனந்தபத்மனாபா கோவில். இந்த கோவிலுக்கு வாழைப்பழங்கள் விற்பனை செய்வதற்காக கடந்த ஆண்டு டெண்டர் விடப்பட்டது.
அப்போது குறைந்த விலைக்கு வாழைப்பழங்களை விற்பதாக கூறிய முஸ்லிம் வியாபாரிக்கு டெண்டர் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து இந்து அமைப்பினருக்கு அண்மையில் தெரியவந்தது.
அதையடுத்து அவர்கள் முஸ்லிம் வியாபாரிகள் வழங்கும் பழங்களை கோவிலில் பயன்படுத்த கூடாது எனவும், அவர்களை வியாபாரம் செய்ய அனுமதிக்க கூடாது எனவும் கூறி போராட்டம் நடத்தினர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில்.கோவிலுக்கு வாழைப்பழங்கள் வழங்க கடந்த ஆண்டு டெண்டர் விடப்பட்டது.
டெண்டர் காலம் வருகிற 30-ந் தேதி முடிகிறது. அதன் பிறகு அடுத்த டெண்டர் யாருக்கு வழங்கலாம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம். அதுவரை போராட்டத்தை கைவிடுங்கள் என்றனர்.