விவசாயி கொலை வழக்கில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது

யாதகிரியில் விவசாயி கொலை வழக்கில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது செய்யப்பட்டார். கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.;

Update: 2023-07-25 21:20 GMT

பெங்களூரு:

யாதகிரியில் விவசாயி கொலை வழக்கில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது செய்யப்பட்டார். கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.

விவசாயி கொலை

யாதகிரி மாவட்டம் குருமித்கல் தாலுகா கொங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கசப்பா (வயது 36). விவசாயி. இவரது மனைவி அனிதா (31). இந்த நிலையில் கடந்த மாதம் கசப்பா, தனது விளைநிலத்தில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து குருமித்கல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கசப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் கசப்பாவை யாரோ கொலை செய்து உடலை தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து குருமித்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கசப்பாவின் மனைவி அனிதாவின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அவரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அனிதா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கசப்பாவை கொலை செய்தது தெரியவந்தது.

கள்ளத்தொடர்புக்கு இடையூறு

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அனிதாவுக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த நாகராஜ் (25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த கசப்பா, தனது மனைவியை கண்டித்துள்ளார். மேலும் நாகராஜின் பெற்றோரும், மகனை கண்டித்துள்ளனர். பின்னர் அவரை வேலைக்காக பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அனிதாவும், நாகராஜும் கள்ளத்தொடர்பை தொடர்ந்துள்ளனர்.

மேலும் அனிதாவின் பேச்சை கேட்டு நாகராஜ் கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவர் கசப்பாவை தீர்த்துக்கட்ட அனிதா முடிவு செய்தார். இதுபற்றி நாகராஜிடமும் தெரிவித்துள்ளார். இதற்கு அவரும் சம்மதித்துள்ளார். அதன்படி 2 பேரும் சேர்ந்து கசப்பாவை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர் உடலை தூக்கில் தொங்க விட்டனர். இதையடுத்து அனிதா, தனது கணவர் கசப்பா தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து போலீசார் அனிதா மற்றும் அவரது கள்ளக்காதலன் நாகராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்