கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை
மைசூருவில், முன்விரோதத்தில் கத்தியால் குத்தி வாலிபரை கொலை செய்த நண்பர்கள் 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
மைசூரு:
மைசூருவில், முன்விரோதத்தில் கத்தியால் குத்தி வாலிபரை கொலை செய்த நண்பர்கள் 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
முன்விரோதம்
மைசூரு தாலுகா மெல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ்(வயது 24). இதேபோல் அதேகிராமத்தை சேர்ந்தவர்கள் ரகு, சச்சின், கிரண் மற்றும் சங்கர். இவர்கள் 5 பேரும் நண்பர்கள் ஆவார்கள்.
இதில் மனோஜூக்கு பிறந்த நாள் கொண்டாடுவது தொடர்பாக அவருக்கும், நண்பர்கள் 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டள்ளது. இது முன்விரோதமாக மாறி நண்பர்கள் 4 பேரும், மனோஜை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர்.
வாலிபர் கொலை
இந்த நிலையில் நேற்று காலை மனோஜ் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த நண்பர்கள் தகராறு செய்து கத்தியால் சரமாரியாக மனோஜை குத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் 4 பேரும் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், மனோஜை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் மனோஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
வலைவீச்சு
இதுபற்றி தகவல் அறிந்த வருணா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மனோஜின் உடலை கைப்பற்றி மைசூரு கே.ஆர். ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், முன்விரோதத்தில் மனோஜை அவரது நண்பர்கள் கத்தியால் குத்தி கொன்றுவிட்டு தப்பி தலைமறைவானது தெரியவந்தது. இதுகுறித்து வருணா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 4 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.