மைசூருவில் முன்விரோதம் காரணமாக தையல்காரர் படுகொலை

மைசூருவில் முன்விரோதம் காரணமாக தையல்காரரை கத்தியால் குத்தி கொலை செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-10-07 21:58 GMT

மைசூரு:

மைசூருவில் முன்விரோதம் காரணமாக தையல்காரரை கத்தியால் குத்தி கொலை செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

முன்விரோதம்

மைசூரு டவுன் சாந்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் சதாகத்(வயது 28). இவர் அந்த பகுதியில் ஆட்டோக்களின் இருக்கையை தைத்து கொடுத்து வருகிறார். இவரது நண்பர் ஹனீப். இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த 3 பேருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில நேற்றுமுன்தினம் மாலை சதாகத் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றார். அப்போது அந்த நபர்கள் ஹனீப்பை தாக்கி உள்ளனர். மேலும் சதாகத்தை உடனே வருமாறு செல்போன் மூலம் அழைக்கும்படி கூறியுள்ளனர். இதையடுத்து ஹனீப், சதாகத்தை பலமுறை தொடர்பு கொண்டுள்ளார்.

கத்திக்குத்து

இதையடுத்து சதாகத், ஹனீப் கூறிய லஸ்கர் மொஹல்லா போலீஸ் எல்லைக்குட்பட்ட உட்பட்ட பகுதிக்கு விரைந்து வந்தார். பின்னர் அங்கு வந்த சதாகத்தை அவர்கள் 3 பேரும் சோ்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சதாகத்தை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் சதாகத் கத்திக்குத்து காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

மேலும் ஹனீப், அவர்களை தடுக்க முயன்றுள்ளார். அவரையும் கத்தியால் குத்திய நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த் அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கே.ஆர்.ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

வலைவீச்சு

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சதாகத் உயிரிழந்தார். ஹனீப்புக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து லஸ்கர் மொஹல்லா போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 3 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்