காதலிக்க மறுத்த புதுப்பெண் படுகொலை; வாலிபர் வெறிச்செயல்

பெங்களூரு அருகே புதுப்பெண் குத்திக் கொலை செய்யப்பட்டார். காதலிக்க மறுத்ததால் வாலிபர் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டார்.

Update: 2022-09-16 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு அருகே புதுப்பெண் குத்திக் கொலை செய்யப்பட்டார். காதலிக்க மறுத்ததால் வாலிபர் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டார்.

திருமணமாகி 15 நாள்

பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தாலுகா விஜயப்புரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஆவதி கிராமத்தைச் சேர்ந்தவர் சவுமியா(வயது 23). இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு வாலிபருடன் திருமணம் நடந்தது. இதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள காபி டேவில் ஊழியராக சவுமியா வேலை பார்த்து வந்தார். அங்கு சுப்பிரமணி என்பவரும் ஊழியராக வேலை செய்தார். இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்ததால், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து, சவுமியாவை சுப்பிரமணி காதலிக்க தொடங்கினார். தனது காதலை சவுமியாவிடம் சுப்பிரமணி தெரிவித்தார். ஆனால் சுப்பிரமணியின் காதலை சவுமியா நிராகரித்து விட்டார். மேலும் அவருடன் பேசி, பழகுவதையும் சவுமியா நிறுத்தி விட்டார். அத்துடன் தனக்கு திருமணம் நடைபெற இருந்ததால், வேலையில் இருந்தும் சவுமியா நின்று விட்டார். இதன் காரணமாக சவுமியாவை சுப்பிரமணியால் தொடர்பு கொள்ள முடியாமல் போனது.

கத்திக்குத்து

இதற்கிடையில், சவுமியாவின் செல்போன் எண் சுப்பிரமணிக்கு கிடைத்ததாக தெரிகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் அவரை பார்த்து பேச வேண்டும் என்று சுப்பிரமணி கூறியுள்ளார். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு சவுமியாவின் வீட்டுக்கு சுப்பிரமணி சென்றார். வீட்டின் அருகே வைத்து 2 பேரும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

அப்போது திடீரென்று ஆத்திரமடைந்த சுப்பிரமணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சவுமியாவை சரமாாியாக குத்தினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சவுமியாவின் சகோதரர், தன்னுடைய சகோதரியை காப்பாற்ற முயன்றார். அந்த சந்தர்ப்பத்தில் சவுமியாவின் சகோதரரையும் தாக்கிவிட்டு சுப்பிரமணி தப்பி ஓடிவிட்டார்.

காதலிக்க மறுத்ததால்...

உயிருக்கு போராடிய சவுமியாவை உடனடியாக குடும்பத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சவுமியா இறந்து விட்டார். இதுபற்றி அறிந்த விஜயப்புரா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினாா்கள். விசாரணையில், சவுமியாவை ஒரு தலையாக காதலித்த சுப்பிரமணி நேற்று முன்தினம் இரவு பேசிக் கொண்டு இருந்த போது, அவருக்கு திருமணம் நடந்திருப்பது பற்றியும் அறிந்து கொண்டார்.

தன்னை காதலிக்க மறுத்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்ததால், அவரை குத்திக் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து விஜயப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட சுப்பிரமணியை வலைவீசி தேடிவருகிறாா்கள். திருமணமான 15 நாளில் புதுப் பெண் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் விஜயப்புராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்