கார் டிரைவர் ஆயுதங்களால் தாக்கி கொலை
பெங்களூரு அருகே கார் டிரைவர் ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார்.
பெங்களூரு:
பெங்களூரு அப்பிரெட்டி பாளையா பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 28), கார் டிரைவர். இவர், கடந்த மாதம் (ஜூலை) 27-ந்தேதி இரவு தனது நண்பர்களுடன் இந்திராநகர் பகுதியில் உள்ள மதுபான விடுதிக்கு சென்றிருந்தார். பின்னர் குடிபோதையில் இருந்த ஒரு கும்பல் மதுஅருந்தியதற்கான பணத்தை காசாளரிடம் கொடுப்பது தொடர்பாக வாக்குவாதம் செய்தனர். இதை பார்த்த பிரகாஷ், அந்த கும்பலிடம் பணத்தை கொடுத்துவிட்டு சமாதானமாக செல்லும்படி கூறியதாக தெரிகிறது.
இதனால் குடிபோதையில் இருந்தவர்களுக்கும், பிரகாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே பிரகாஷ், அவரது நண்பர்கள் மதுபான விடுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். அப்போது அங்கு வந்த கும்பலினர், பிரகாசை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கினர். இதில், பலத்தகாயம் அடைந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பிரகாஷ் இறந்து விட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து இந்திராநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகிறார்கள்.