நகராட்சி கவுன்சிலரின் கணவர் சுட்டுக்கொலை

விஜயாப்புராவில் பட்டப்பகலில், நகராட்சி கவுன்சிலரின் கணவர் மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

Update: 2023-05-06 21:29 GMT

விஜயாப்புரா:-

பிரபல ரவுடி

விஜயாப்புரா டவுன் சந்தாப்புரா காலனியை சேர்ந்தவர் ஹைதர் அலி நதாப்(வயது 35). பிரபல ரவுடி ஆவார். இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் விசாரணையில் உள்ளன. இவரது மனைவி நிஷாத். இவர் நகராட்சி சுயேச்சை கவுன்சிலர் ஆவார். முன்விரோதம் காரணமாக ஹைதர் அலி நதாப்பிற்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ஹைதர் அலி நதாப் தனது வீட்டின் முன்பு காரில் ஏறுவதற்கு முயன்றார். அப்போது அங்கு காரில் ஒரு கும்பல் வந்தது. அந்த கும்பல் திடீரென ஹைதர் அலி நதாப்பை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. உடனே அவர் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். ஆனால் அந்த கும்பலை அவரை விரட்டி சென்று தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டது.

துப்பாக்கியால் சுட்டு

இதில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ஹைதர் அலி நதாப் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் ஜல்நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் ரவுடியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்து இருப்பதும், ரவுடியை, கும்பல் ஓட, ஓட விரட்டி துப்பாக்கியால் சுட்டு கொடூரமாக கொன்றதும் தெரிந்தது. மேலும் அவரது உடலை 5 துப்பாக்கி குண்டுகள் துழைத்தது விசாரணையில் தெரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்.டி. ஆனந்த்குமார் சம்பவ இடத்திற்கு சென்றார். அவர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.

மேலும் கொலையாளிகளை விரைவாக பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்ட இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி மர்மகும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்