மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 800 புள்ளிகள் சரிவு
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 800 புள்ளிகள் சரிவடைந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.;
மும்பை,
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு மளமளவென 800 புள்ளிகள் வரை சரிந்து 57,300 புள்ளிகள் என்ற அளவிற்கு கீழே சென்றது.
இதில், டி.சி.எஸ்., எச்.சி.எல்.டெக் ஆகியவை முறையே 0.43 சதவீதம் மற்றும் 0.53 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்து உள்ளன. இதுதவிர, டாடா ஸ்டீல் (1.02%), மகிந்திரா அண்டு மகிந்திரா (1.07%), பஜாஜ் பைனான்ஸ் (1.53%), எச்.டி.எப்.சி. வங்கி (1.77%) மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி (2.23%) உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1 முதல் 2 சதவீத சரிவுடன் காணப்பட்டன.
இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடும் சரிவடைந்து 17,110 புள்ளிகளாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் இன்று வீழ்ச்சி கண்டது. உக்ரைன் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் டாலரின் தேவை அதிகரிப்பு உள்ளிட்டவை பங்குகள் சரிவடைய கூறப்படும் சில காரணங்களாக உள்ளன.