நில மோசடி வழக்கில் கைதான சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்துக்கு 22ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
இன்று காலை அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து சிறப்பு கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
மும்பை,
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், "பத்ரா சால் நில மோசடி வழக்கில்" தொடர்பாக கடந்த மாதம் 30-ம் தேதி அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அன்று காலையில் சஞ்சய் ராவத் இல்லத்தில் ரெய்டு நடத்திவிட்டு விசாரணைக்கு அழைத்து சென்று இரவில் கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து, இரண்டு நாள்களுக்கு முன்பு சஞ்சய் ராவத் மனைவியிடமும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், இன்று காலை அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து சிறப்பு கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடந்தது.
அதனை தொடர்ந்து, சஞ்சய் ராவத்தை இம்மாதம் 22ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதே வேளையில் அவருக்கு தேவைப்படும் மருத்துவ வசதிகள் அளிக்கப்படலாம் என்றும் அனுமதி அளித்துள்ளது.
சஞ்சய் ராவத்தை ஜாமினில் வெளியே கொண்டுவர கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.