மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி அடித்துக் கொலை.. சிறையில் நடந்த கொடூர தாக்குதல்
சிறையில் வாக்குவாதம் ஏற்பட்டபோது, சில விசாரணைக் கைதிகள் வடிகாலில் மூடப்பட்டிருந்த இரும்பு மூடியை எடுத்து அலி கானின் தலையில் பலமாக தாக்கி உள்ளனர்.
மும்பை:
மும்பையில் 1993-ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளி முன்னா என்ற முகமது அலிகான் (வயது 59) ஆயுள் தண்டனை பெற்று கோலாப்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.
இந்நிலையில், சிறைச்சாலையில் உள்ள குளியலறையில் இன்று குளிக்கச் சென்றபோது முகமது அலி கானுக்கும் வேறு சில கைதிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, எதிர்தரப்பினர் தாக்கியதில் முன்னா உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் சிறை வளாகத்தில் பதற்றமான சூழல் உருவானது. 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
'சிறையில் வாக்குவாதம் ஏற்பட்டபோது, சில விசாரணைக் கைதிகள் வடிகாலில் மூடப்பட்டிருந்த இரும்பு மூடியை எடுத்து அலி கானின் தலையில் பலமாக தாக்கினர். இதில் அவர் நிலைகுலைந்து தரையில் சரிந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 5 விசாரணைக் கைதிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
மும்பையில் 1993-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 257 பேர் கொல்லப்பட்டனர், 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.