மும்பை: ஓய்வு பெற்ற விமானியிடம் ரூ.1½ லட்சம் மோசடி
மும்பையில் ஓய்வு பெற்ற ஏர்இந்தியா விமானியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1½ லட்சம் அபேஸ் செய்யப்பட்டது.
மும்பை,
மும்பை பாந்திரா பகுதியில் ஓய்வு பெற்ற ஏர்இந்தியா விமானி வசித்து வருகிறார். இவர் போர்சுக்கல் நாட்டுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். இதற்காக அவர் ஆன்லைனில் ஓட்டல் அறைகளை முன்பதிவு செய்ய முயன்றார்.
இதில் கூகுளில் ஒரு ஓட்டலின் வாடிக்கையாளர் உதவி எண் கிடைத்தது. விமானி அந்த எண்ணை தொடர்பு கொண்டார். ஆனால் யாரும் போனை எடுக்கவில்லை. இந்தநிலையில் சிறிது நேரத்தில் வேறு ஒரு எண்ணில் இருந்து மர்ம நபர் விமானியை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அந்த நபர் ஓட்டல் அறையை முன்பதிவு செய்ய விமானியின் ஏ.டி.எம். கார்டு விவரம், சி.வி.வி. எண்ணை கேட்டார். விமானியும் அவரிடம் அந்த விவரங்களை கூறினார்.
இந்தநிலையில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1½ லட்சம் அபேஸ் செய்யப்பட்டது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் சம்பவம் குறித்து பாந்திரா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓய்வு பெற்ற விமானியிடம் ரூ.1½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.