ரெட் அலர்ட் வார்னிங்: வெள்ளத்தில் மிதக்கும் மும்பை... பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

மும்பையில் இன்று பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2024-07-09 03:41 GMT

மும்பை,

மும்பையில் கடந்த மாதம் 10-ந்தேதி பருவமழை தொடங்கியது. எனினும் நகரில் மிதமான மழையே பெய்து வந்தது. இந்த சூழலில் மும்பையை அடுத்த மாவட்டங்களான நவிமும்பை, தானே, பால்கர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் மழை வெளுத்து வாங்கியது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 1 மணி முதல் மும்பையில் பலத்த மழை பெய்தது. விடிய, விடிய மும்பை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. பேய் மழை காரணமாக மும்பையில் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளித்தன. குறிப்பாக மும்பை கிழக்கு, மேற்கு புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.

இந்தநிலையில் மாலை 5.30 மணியளவில் நகருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மும்பையில் மழை இடைவிடாமல் பெய்தது. மாலை 6 மணி முதல் இரவு வரை நகரின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. பலத்த மழை காரணமாக குர்லா, சயான், சாக்கிநாக்கா, அந்தேரி, மலாடு, கோரேகாவ், தகிசர், பாண்டுப், முல்லுண்டு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது.

இடைவிடாமல் பெய்த மழை காரணமாக சயான், குர்லா, சுன்னாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக நேற்று காலை மெயின், துறைமுக வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி நடந்து சென்றனர். ரெயில் சேவை பாதிப்பால் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலை மோதியது.

மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் பஸ், டாக்சி, ஆட்டோ போன்ற வாகனங்கள் மூலம் வேலைக்கு படையெடுத்தனர். இதன் காரணமாக பஸ் நிறுத்தங்கள் மற்றும் ரெயில் நிலையங்கள் அருகில் டாக்சி, ஆட்டோ ஸ்டாண்டுகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் ரெயில், சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே தண்டவாளம், சாலைகளில் தேங்கிய தண்ணீரை ராட்சத பம்புகள் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி, ரெயில்வே துறையினர் ஈடுபட்டனர். இதன் காரணமாக மதிய நேரத்துக்கு பிறகு ரெயில், சாலை போக்குவரத்து சீரானது. கனமழை காரணமாக மும்பையில் நேற்று கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. பல அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆர்ப்பரித்தது.

மும்பை மட்டுமின்றி தானே, ராய்காட், நவிமும்பை, பால்கர் பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது. அங்கு தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. இதற்கிடையே மழை பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகளை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மும்பை மாநகராட்சி தலைமையகத்தில் ஆய்வு செய்தார். அப்போது அவர் வெள்ளம் தேங்கிய இடங்களில் உடனடியாக தண்ணீரை வெளியேற்றவும், தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மழை காரணமாக நேற்று மும்பை, ரத்னகிரி, சிந்துதுர்க் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதேபோல மும்பை பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது. மழையால் எம்.எல்.ஏ.க்கள் வர முடியாமல் போனதால் நேற்று காலை முதல் மதியம் வரை சட்டசபையும் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே இன்று (9-ந் தேதி) மும்பையில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பால்கர், தானே, ராய்காட் மாவட்டங்களுக்கும் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை எச்சரிக்கையை அடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மும்பையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (9-ந் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் நவிமும்பை, தானே மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்