மராட்டியம்: மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-01-22 04:16 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மாரத்தான் ஓட்டத்தில் வெளிநாட்டினர் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் தொடங்கி 42 கிலோமீட்டர் தூரம் வரை மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த மாரத்தானில் பங்கேற்க குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மாரத்தானில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஸ்வர்தீப் பானர்ஜி (வயது 40) இந்த மாரத்தானில் பங்கேற்றார். ஹஜி அலி ஜங்ஷன் அருகே ஓடிக்கொண்டிருந்தபோது அவர் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அதேபோல், மும்பையை சேர்ந்த ராஜேந்திர போரா (வயது 74) என்ற முதியவரும் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றார். அவர் மெரின் டிரைவ் பகுதியில் ஓடிக்கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். அவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராஜேந்திரபோரா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

மேலும், மாரத்தான் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற 22 பேர் மூச்சுத்திணறல், மயக்கம் உள்ளிட்ட காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்