சொகுசு கார் மோதி பெண் பலியான வழக்கு: தலைமறைவான சிவசேனா தலைவரின் மகன் பிடிபட்டது எப்படி..?

சொகுசு கார் மோதி பெண் பலியான வழக்கில் சிவசேனா பிரமுகரின் மகன் கைது செய்யப்பட்டார்.;

Update: 2024-07-10 06:07 GMT

மும்பை,

மும்பை ஒர்லி கோலிவாடா பகுதியை சேர்ந்தவர் காவேரி நக்வா (வயது45). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கணவர் பிரதீப் நக்வாவுடன் ஸ்கூட்டரில் ஒர்லி அட்ரியா வணிக வளாகம் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு கார், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பிரதீப் தூக்கி வீசப்பட்டார். காவேரி நக்வா காரின் முன்பகுதியில் சிக்கிக்கொண்டார்.

கார் டிரைவர் காரை நிறுத்தாமல் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு காவேரி நக்வாவை இழுத்து சென்று உள்ளார். அதன்பிறகு காரில் இருந்தவர்கள் காவேரி நக்வாகை காரில் இருந்து சாலையில் போட்டுவிட்டு தப்பி சென்றனர்.

அப்படி தப்பி சென்றபோது அவர்களது கார் சாலையில் கிடந்த காவேரி நக்வா மீது ஏறியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விபத்தை எற்படுத்திய கார் பால்கரை சேர்ந்த சிவசேனா பிரமுகர் ராஜேஸ் ஷாவுக்கு சொந்தமானது என தெரியவந்தது. மேலும் அவரது மகன் மிகிர் ஷா(24) காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. கார் ஓட்டிய போது அவர் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

விபத்து நடந்த அன்று போலீசார் மிகிர் ஷாவை தப்பிக்க வைத்த ராஜேஸ் ஷா, காரில் இருந்த டிரைவர் ராஜஸ்ரீ பிதாவத்தை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த மிகிர் ஷாவை போலீசார் 11 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மிகிர் ஷாவை போலீசார் கைது செய்தனர். இரண்டு நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் இருந்த போலீசார் சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்ட அவரது மொபைலை கண்காணித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து திடீரென அவரது மொபைல் போன் ஆன் செய்யப்பட்டதை அறிந்த போலீசார், அதன் டவர் லொகேஷனை வைத்து அவரை கைது செய்துள்ளனர்.

முன்னதாக மிகிர் ஷாவின் தந்தை ராஜேஸ் ஷா ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருந்தார். கார் டிரைவர் ராஜஸ்ரீ பிதாவத் போலீஸ் காவலில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரின் போலீஸ் காவல் நாளை (11-ந் தேதி) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்