மும்பை: உர தொழிற்சாலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் பலி...!

மும்பை அருகே மத்திய அரசுக்கு சொந்தமான ரசாயன மற்றும் உர தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் 3 தொழிலாளர்கள் பலியாகினர். 3 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-10-19 23:50 GMT



மும்பை,

மராட்டிய தலைநகர் மும்பையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் ராய்காட் மாவட்டம் அலிபாக்கில் உள்ள தால் என்ற இடத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய ரசாயன மற்றும் உர தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை சேர்ந்த ஒரு குழுவினர் நேற்று மாலை அங்குள்ள ஏ.சி.யை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். சுமார் 4.45 மணி அளவில் திடீரென அங்கிருந்த ஏ.சி. கம்பிரசர் வெடித்து சிதறியது.

இதில் ஏ.சி.யை சரிசெய்யும் பணியில் இருந்த சுமார் 6 தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துபோனார்கள். மற்ற 3 பேரும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினரும், போலீசாரும் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பவ இடத்தை ஆய்வு செய்த போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்