யூஸ்லெஸ்: தெலுங்கானா அணை குறித்து மத்திய குழு பரபரப்பு அறிக்கை.. ஆளுங்கட்சி பதிலடி
திட்டமிடல், வடிவமைப்பு, தரக் கட்டுப்பாடு, செயல்படுத்துதல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் தெலுங்கானா அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளது என மத்திய குழு கூறியிருக்கிறது.;
ஐதராபாத்:
தெலங்கானா மாநிலம் ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தில் உள்ள மேடிகட்டா என்ற கிராமத்தில், கோதாவரி ஆற்றின் குறுக்கே காலேஸ்வரம் நீர்பாசன திட்டத்தின் கீழ் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கதவணை கட்டப்பட்டது. முதல்-மந்திரி சந்திரசேசர ராவின் கனவு திட்டமாக இந்த அணை கட்டப்பட்டது. ஆற்றின் குறுக்கே 1.6 கி.மீ நீளத்திற்கு 85 மதகுகள் மற்றும் தூண்களுடன் மேம்பாலத்துடன் பிரமாண்டமாக இந்த அணை அமைந்துள்ளது.
இந்த அணையின் மூலம் தெலங்கானாவின் 23 மாவட்டங்களில் குடிநீர், பாசன வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட இந்த அணையின் 6 தூண்கள் கடந்த மாதம் 21ம் தேதி இரவு பலத்த சத்தத்துடன் சரிந்து 4 அடிக்கு கீழே இறங்கின. இதையடுத்து அணையின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
அதன்படி தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் சிறப்பு குழுவினர் அணையை ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
அணையின் தூண்கள் ஆற்றுக்குள் மூழ்கியிருப்பது, திட்டமிடல் மற்றும் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளை காட்டுகிறது. தடுப்பணை வலுவிழந்ததால், குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்காக அனைத்து கதவணைகளும் திறக்கப்பட்டு 10 மில்லியன் கனஅடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
திட்டமிடல், வடிவமைப்பு, தரக் கட்டுப்பாடு மற்றும் செயல்படுத்துதல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் தெலுங்கானா அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளது.
அசாதாரண நிகழ்வு மற்றும் பாதிப்பு குறித்த அறிகுறிகளை சரிபார்ப்பதற்காக தொடர்ந்து ஆய்வுகளை நடத்தவேண்டும் என தெலுங்கானா அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை என்று தெரிகிறது.
தற்போதைய நிலையில் தடுப்பணை முழுமையாக சீரமைக்கும் வரை பயனற்றதாகவே உள்ளது. சேதமடைந்த 7வது பகுதியை மீண்டும் கட்டமைக்க வேண்டும். அப்போது அருகில் உள்ள மற்ற பகுதிகள் வலுவிழக்கும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நடந்தால் முழு தடுப்பணையையும் சீரமைக்க (புனரமைக்க) வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேதத்தின் அளவு மற்றும் மத்திய குழுவின் அறிக்கையை பார்க்கும்போது, முழு தடுப்பணையையும் மீண்டும் கட்ட வேண்டியிருக்கும் என தெரிகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு வெளியான இந்த அறிக்கை, அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்-மந்திரி சந்திரசேகர ராவுக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவர் மீது பாஜக, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சரமாரியான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று மேடிகட்டா அணையை பார்வையிட்டார். மாநில பாஜக தலைவரும் மத்திய மந்திரியுமான ஜி கிஷன் ரெட்டியும் ஆளுங்கட்சியை தாக்கினார். "ஊழல், தோல்வியடைந்த திட்டங்கள்" என அவர் விமர்சித்துள்ளார்.
இந்த அறிக்கைக்கு ஆளுங்கட்சியான பிஆர்எஸ் பதிலடி கொடுத்துள்ளது. இந்த அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று முதல்-மந்திரியின் மகனும் தெலுங்கானா மந்திரியுமான கே.டி.ராமராவ் கடுமையாகச் சாடினார். தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் இந்த அறிக்கை வந்திருப்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.