கருடசேவையை முன்னிட்டு திருப்பதி மலைப்பாதைகளில் மோட்டார்சைக்கிள்கள் செல்ல தடை - தேவஸ்தானம் தகவல்
கருடசேவையை முன்னிட்டு திருப்பதி மலைப்பாதைகளில் மோட்டார்சைக்கிள்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.;
திருமலை,
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதையொட்டி இன்று (சனிக்கிழமை) இரவு கருடசேவை நடக்கிறது.
கருடசேவையை பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருமலையிலும், திருப்பதி மலைப்பாதைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் எனக் கருதி மோட்டார்சைக்கிள்கள் திருப்பதி மலைப்பாதைகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை நேற்று மதியம் 12 மணியில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12 மணி வரை அமலில் இருக்கும். எனவே பக்தர்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.