மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; தந்தை-மகள் சாவு

கலபுரகி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் தந்தையும், மகளும் பரிதாபமாக பலியான சம்பவம் நடந்துள்ளது.;

Update:2023-08-19 00:15 IST

கலபுரகி :-

ஜேவர்கி தாலுகாவில் மோட்டார் சைக்கிளும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் தந்தையும், மகளும் பரிதாபமாக பலியான சம்பவம் நடந்துள்ளது.

லாரி மோதியது

கலபுரகி மாவட்டம் ஜேவர்கி தாலுகா கம்வாரா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி காயத்ரி. இந்த தம்பதிக்கு பிரதீப் என்ற மகனும், அபேஷா(வயது 4) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் பிரகாஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் ஜேவர்கியில் இருந்து கம்வாராவுக்கு சென்று கொண்டிருந்தார்.

நிடிசின்னூர் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பிராகாசின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் பிரகாஷ் மற்றும் அபேஷா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

லாரி டிரைவர் தலைமறைவு

காயத்ரி மற்றும் பிரதீப் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லாரி டிரைவர் வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஜேவர்கி போக்குவரத்து போலீசார், பிரகாஷ் மற்றும் அபேஷாவின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்