மோட்டார் சைக்கிள் வெள்ளத்தில் சிக்கியது; சிறுமி சாவு

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா அருகே மோட்டார் சைக்கிள் வெள்ளத்தில் சிக்கியதில் சிறுமி உயிரிழந்தாள்.

Update: 2022-10-20 18:45 GMT

ஹாசன்:

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா தொட்டஹள்ளிகெரே சேர்ந்தவள் மாணவி ரஞ்சிதா (வயது 11). தனியார் பள்ளியில் 5-வது வகுப்பு படித்து வந்தாள். கடந்த சில நாட்களாக ஹாசன் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் தொட்டஹள்ளிகெரே ஏரி கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரியில் இருந்து வெளியேறும் நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாகனங்கள் சென்றால் அடித்து செல்லும் அளவிற்கு தண்ணீர் ஓடுகிறது. இந்த நிலையில் நேற்று சிறுமி ரஞ்சிதா, தனது பெரியப்பா மகனுடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாள்.

அப்போது தொட்டஹள்ளிகெரே ஏரி சாலை வெள்ளத்தில் சென்றபோது மோட்டார் சைக்கிள் அடித்து செல்லப்பட்டது. இதில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து கீழே விழுந்து ரஞ்சிதா உயிரிழந்தார். இதுகுறித்து சென்னராயப்பட்டணா புறநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சென்னராயப்பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்